ஆசார்யாள் பிறந்த ஊர் காலடியானாலும், ஸ்வாமி தாமே அவராகப் பிறக்கப் போவதாக அவருடைய பிதாவான சிவகுருவுக்கு வரம் தந்தது திருச்சூரில்.
திருச்சூர், சிவகுரு என்பவற்றைப் பற்றி என் ஆராய்ச்சியைச் சொல்கிறேன். ஆசார்யாள் கதையைவிட மலையாளத்தின் கதைக்கே அது அதிக ஸம்பந்தமுடையதாகையால் இங்கேயே சொல்லிவிடுகிறேன்.ஒரு நாட்டினர் வேறொரு நாட்டுக்குக் குடி பெயரும் போது தங்களுடைய பழைய நாட்டில் தாங்கள் வாழ்ந்து வந்த ஊர்களின் பெயர்களையே புதிய நாட்டின் ஊர்களுக்கும் வைப்பது ஸஹஜமாயிருக்கிறது. தாய்நாட்டைவிட்டு வந்து விட்டாலுங்கூட மாத்ரு பூமியபிமானம் இப்படிப் பண்ணத் தூண்டுகிறது. இங்கிலீஷ்காரர்கள் அமெரிக்காவில் குடியேறியபின், இம்மாதிரிதான் தங்கள் தாய்நாட்டு ஊர்ப் பெயர்களுக்கே ‘ந்யூ, ‘ந்யூ’ என்று சேர்த்து அமெரிக்காவில் புதிய ஊர்களை ஏற்படுத்திக்கொண்டார்கள். ‘ந்யூ இங்க்லாண்ட்’ என்றே அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்கள் ஆறுக்கும் சேர்த்துப் பெயர் உண்டு. இங்க்லாண்டில் யார்க், ஹாம்ப்ஷயர், ஜெர்ஸி என்றெல்லாம் இடங்கள் இருப்பது போலவே அமெரிக்காவில் ந்யூ யார்க், ந்யூ ஹாம்ப்ஷயர், ந்யூ ஜெர்ஸி என்றெல்லாம் பெயர் வைத்தார்கள். இப்படியே கிழக்கே ஆஸ்ட்ரேலியாவிலும் தங்கள் தாய்நாட்டுப் பேர்களை வைத்தார்கள். ந்யூ ஸெளத் வேல்ஸ் என்றே அங்கே ஒரு மாகாணத்துக்குப் பேர்.
இதேபோலத் தமிழ்நாட்டிலிருந்து பல பேர் மலையாளத்துக்குப் போய் ‘ஸெட்டில்’ ஆனபோது தமிழ்நாட்டுப் ஊர்ப் பெயர்களை அங்கே வைத்தார்கள். ஆல்வாய், (ஆலவாய்) , பழூர் (பழுவூர்) , கண்ணனூர், மாத்தூர், மேச்சேரி என்றெல்லாம் மலையாளத்து ஊர்ப் பெயர்கள் இருப்பது அப்படியே தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்களை அங்கே வைத்ததுதான்.ஆசார்யாள் சரிதத்திலிருந்து பல நூற்றாண்டுகள் தாண்டி வருவோம் :காஞ்சீபுரத்தில் இருந்துவந்த நம் மடம் பதினெட்டாம் நூற்றாண்டு மத்தியில் அங்கேயிருந்து புறப்படவேண்டி வந்து, முடிவாகக் கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது. அந்தக் காலத்தில் Carnatic Wars என்று சொல்லப்படும் யுத்தங்களில் காஞ்சிப் பிரதேசத்தில் ஓயாத சண்டையும் முற்றுகையுமாக இருந்தது. ஆர்க்காட்டு நவாப், ஈஸ்ட் இண்டியா கம்பெனி, ப்ரெஞ்சுக்காரர்கள், ஹைதர் அலி என்று எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் குஸ்தி போட்டுக் கொண்டிருந்ததில் காஞ்சீபுரத்தில் கோவில்களையே கோட்டையாக உபயோகித்துக்கொண்டு ஆயுதங்கள் வீசுவது, ஊருக்குள் புகுந்து சூறையாடுவது என்றெல்லாம் விபரீதமாக நடந்து வந்தன.
அதனால்தான் அப்போது நம் மடத்திலிருந்த ஸ்வாமிகள்1 மடத்தை இடம் மாற்றியது.ராமேச்வரம் வரை யாத்ரை போய்விட்டு அப்புறம் உடையார்பாளையம் என்ற ஸம்ஸ்தானத்திற்குப் போய்த் தங்கினார்.திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள உடையார்பாளையம் அப்போது தஞ்சாவூர் மஹாராஷ்ட்ர ராஜ்யத்திற்கு உட்பட்ட ஒரு ஜமீன்தாரி மாதிரி இருந்தது. அந்த ஸம்ஸ்தானாதிபதிகள் நம்முடைய மடத்தை ஆச்ரயித்து வந்தவர்கள். அதனால் அப்போதிருந்த ராஜா-அல்லது ஜமீன்தார்-அப்போதிருந்த ஸ்வாமிகளை அங்கே வந்து தங்கும்படி ப்ரார்த்தித்துக் கொண்டதன் பேரில் ஸ்வாமிகளும் அப்படியே பண்ணினார். அது நன்றாகக் காடுகள் சூழ்ந்து தற்காப்பாக இருந்த இடம். அதனால் வெளிச் சண்டை சச்சரவுகள் அதிகம் பாதிக்காத இடம்.அந்நிய மதஸ்தர்கள் வந்து இங்கே பரஸ்பரம் குஸ்திப் போட்டுக்கொண்டிருந்த ஸமயத்தில் மடம் பாதுகாப்புக்காக வேற்றிடம் போனதற்குக் குறிப்பாக ஒரு காரணம் உண்டு. அதுதான் ஸ்வர்ண காமாக்ஷி என்பதாகச் சொக்கத்தங்கத்திலேயே ஆன அம்பாளின் விக்ரஹம்.
காமகோஷ்டம் (காமகோட்டம்) என்னும் காஞ்சி காமாக்ஷிகோவிலில் ஒரு ஸந்நிதியில் அந்த ஸ்வர்ண விக்ரஹம் இருந்து வந்தது. அந்தக் கோவில் நம் மடத்தின் நிர்வாஹத்தில் இருப்பது. ஆகையால் குஸ்தி பிடித்துக்கொண்டிருக்கிற அந்நிய மதஸ்தர்கள் சந்தடிச் சாக்கில் ஸ்வர்ண விக்ரஹத்தை அபஹரித்து விடாமல் பாதுகாப்புப் பண்ணவேண்டிய பொறுப்பு மடத்துக்கு இருந்தது. இப்போது காப்பான இடமாக இருந்த உடையார் பாளைய ராஜா அழைப்பு அனுப்பியவுடன் மடம் அங்கே போய்த் தங்கியதோடு ஸ்வர்ண காமாக்ஷியும் கோவில் ஸ்தானீகர்களால் ஜாக்ரதையாக அங்கே கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டாள். அன்றிலிருந்து காமகோஷ்டத்தில் அந்த ஸந்நிதி காலியாகவே இருந்து வருகிறது.
ஸ்வர்ண காமாக்ஷிமட்டுமில்லாமல், இதே மாதிரியான கலவர காலங்களில் சிதம்பரம் நடராஜா, திருவாரூர் த்யாகராஜா, காஞ்சி வரதராஜா (உத்ஸவர்) , ஸ்ரீரங்கம் ரங்கராஜா (உத்ஸவர்) ஆகியவர்களும் தங்கள் இடத்தை விட்டு ஸஞ்சாரம் பண்ணும்படியாக ஏற்பட்டிருக்கிறது. ராஜாக்கள்! அதிலும் ஸ்வாமியே ராஜாவானவர்கள் ஆனால் திக் விஜயம், ராஜ பவனி என்றில்லாமல், இந்த மாதிரி சண்டைக்கு பயந்துகொண்டு ஏன் போகும்படி இருந்ததென்றால், நடு நடுவே நம் மதஸ்தர்கள் ஸமயாபிமானம் குன்றிச் சோர்ந்து போயிருந்தபோது அதற்குத் தண்டனையாகவும், மறுபடியும் அவர்களை எழுப்பித் தூண்டி விடுவதற்காகவும் தான்! ஸ்வாமிக்கு சக்தி இல்லாமல் போய்விட வில்லை! நாம் ஆலஸ்யமாய் சக்தி இழந்து இருந்ததற்கு அநுபவிக்க வேண்டுமென்றே இப்படி விளையாடினார்.
அதோடு அந்த மஹா க்ஷேத்ரமூர்த்திகளுடைய ஸாந்நித்யம் வேறு க்ஷேத்ரங்களிலும் ஏற்படவேண்டும் என்றும் நினைத்திருக்கலாம்.ஸ்வர்ண காமாஷிக்கு மாத்ரமின்றி, ஊரைவிட்டு ஊர் போன நடராஜா, த்யாகராஜா, ரங்கராஜா, வரதராஜா ஆகிய எல்லோருக்குமே ‘டெம்பரரி’வாஸ ஸ்தானமாக இருந்தது உடையார்பாளையம்தான். பாதுகாப்பான இடமாக இருந்ததோடு, நல்ல ஆஸ்திக்ய புத்தி வாய்ந்த ஜமீன்தார்களின் ஆட்சியிலிருந்ததால் இந்தப் பெரிய புண்யத்தைத் தட்டிக்கொண்டது.‘ஸ்வாமி’ என்பதற்கு நேர் தமிழ் உடைமைக்காரர், அல்லது உடையார் என்பதுதான். உடையார் பாளையம் தன் பெயருக்கேற்ப அநேக உடையார்களைத் தன்னிடம் உடையதாகப் பெற்றது!அப்புறம் ஸமாதான காலம் வந்தபோது அந்தந்த மூர்த்தி அதனதன் ஊருக்குத் திரும்பிப் போயிற்று. காமாக்ஷிமட்டும் தஞ்சாவூருக்குப் போய் அங்கேயே ஸ்திரவாஸம் கொண்டுவிட்டாள். ஏனென்று அப்புறம் சொல்கிறேன்.உடையார்பாளையத்தில் சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் இருக்கின்றன. அங்கேயுள்ள சிவன் கோவிலில் இன்றைக்கும் ‘ஸபாபதி மண்டபம்’, ‘த்யாகராஜ மண்டபம்’, ‘காமாக்ஷிமண்டபம்’ என்று அந்த மூன்று மூர்த்திகளும் தாற்காலிக வாஸம் செய்த ஸந்நிதிகள் இருக்கின்றன.
அதேபோல அங்கேயுள்ள பெருமாள் கோவிலில் ரங்கராஜ, வரதராஜ விக்ரஹங்கள் இருந்ததற்கும் சான்று இருக்கிறது. இந்த விஷயம் இருக்கட்டும்.தஞ்சாவூரிலிருந்துகொண்டு அப்போது ஆட்சி செலுத்திவந்த ப்ரதாபஸிம்ஹ மஹாராஜா, தன்னுடைய ராஜ்யத்தில் சேர்ந்ததான உடையார் பாளையத்தில் இருந்து வரும் ஸ்வாமிகளும் மடமும் ராஜதானியான தஞ்சாவூருக்கே வந்துவிட்டால் நன்றாயிருக்குமே என்று நினைத்தார். அப்படியே ஸ்வாமிகளுக்கு ப்ரார்த்தனை செய்துகொண்டு அழைப்பு அனுப்பினார்.
ஸ்வாமிகளும் தஞ்சாவூருக்குப் போய்க் கொஞ்சகாலம் தங்கினார். ஸ்வர்ண காமாக்ஷியும் கூடப் போனாள்.அப்புறம் அவருக்கு, ‘ஸப்த நதி3களில் த்ராவிட தேசத்தில் இருக்கும் ஒன்றே ஒன்றான காவேரி இந்தத் தஞ்சாவூர் மண்டலத்திலேயே ஓடும்போதிலும் நம்முடைய மடத்தை அதன் தீரத்தில் அமைத்துக்கொள்ளாமல் தஞ்சாவூரில் ஏன் அமைத்துக் கொள்ளணும்?’ என்று தோன்றிற்று. அதனால் காவேரித் கரையிலுள்ள கும்பகோணத்துக்கு வாஸத்தை மாற்றிக் கொள்ள நினைத்தார். ராஜாவும் ஸம்மதித்து மஹாராஷ்ட்ரா ப்ராம்மணரான மந்த்ரி டபீர் பந்த் என்பவரிடம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச்சொல்லி உத்தரவிட்டார். அதன்படி டபீர் பந்த் கும்பகோணத்தில் அமைத்துக்கொடுத்த மடமே அதற்கப்புறம் காஞ்சி பீடத்தின் ‘ஹெட் ஆஃபீஸா’கி விட்டது! மடத்தைச் சுற்றி டபீர் பந்த் தம் பெயரிலேயே அக்ரஹாரம் ஏற்படுத்திக்கொடுத்து வித்வான்களான ஸத் ப்ராம்மணர்கள் சூழ்ந்திருக்கும்படியாக உபகாரம் செய்தார்.ஆசை ஆசையாகக் கூப்பிட்டு வைத்து உபசாரம் பண்ணிய ராஜாவுக்கும் தஞ்சாவூர் ஜனங்களுக்கும் ஸந்தோஷமாக இருக்கட்டுமென்று ஸ்வாமிகள் ஒன்று பண்ணினார். என்னவென்றால் ஸ்வர்ண காமாக்ஷி தஞ்சாவூரிலேயே நித்ய ப்ரதிஷ்டையாயிருக்கட்டுமென்று ராஜாவிடம் சொன்னார். ஸ்ரீமடம் மாத்திரமே கும்பகோணத்திற்கு இடம் மாற்றிறு. ராஜா ஸந்தோஷமாக மேல வீதியில் கோவில் கட்டி அம்பாளுக்கு அதை நித்யவாஸமாக்கினார்.
“பங்காரு காமாக்ஷி” என்று இப்போதும் தஞ்சாவூரில் விளங்கி வருபவள் இப்படியாகக் காஞ்சீபுரத்திலிருந்து உடையார்பாளையம் வழியாக அங்கே வந்து சேர்ந்த ஸ்வர்ண காமாக்ஷிதான். ‘பங்காரு’ என்றால் தெலுங்கில் ஸ்வர்ணம் என்று அர்த்தம். ச்யாமா சாஸ்த்ரிகள் ஒரே தெலுங்குப் பாட்டுகளாகப் பாடியது இவள் மேல்தான். அவள் பேரிலும் ‘பங்காரு’ என்ற தெலுங்கு வார்த்தையே சேர்ந்துவிட்டது!அவள் ஸமாசாரம், காஞ்சி மடம் கும்பகோணத்திற்கு வந்து சேர்ந்த ஸமாசாரம் எல்லாம் இருக்கட்டும். திருச்சூரைப் பற்றி அல்லவா பார்த்துக்கொண்டிருந்தோம்? அதற்கும் இதற்கும் என்ன ஸம்பந்தம்?காவேரி தீரத்துக்கு மடத்தை மாற்றவேண்டி வந்த போது அப்போதிருந்த ஸ்வாமிகள் குறிப்பாக கும்பகோணத்தை ஏன் தேர்ந்தெடுத்தாரென்று நான் யோசித்துப் பார்த்தேன்.
தஞ்சாவூருக்கு இன்னம் ரொம்பக் கிட்டேயே ‘பஞ்சநதம்’ என்பதாக நாலு கிளை நதிகளோடு காவேரி ப்ரமாதமாக ஓடிக்கொண்டிருக்கிறாள், அதுதான் திருவையாறு: திரு ஐ ஆறு — ஐந்து ஆறுகள்; அதுதான் ‘பஞ்ச நதம்’. பூலோக கைலாஸம் என்று சொல்லப்படும் மஹா க்ஷேத்ரம் அது. இன்னம் அநேக மஹாக்ஷேத்ரங்களும் காவேரிக் கரையில் இருக்கின்றன. காவேரி துலா ஸ்நான விசேஷத்திற்கென்றே ஏற்பட்டதாக மாயவரம் இருக்கிறது. இப்படிப் பல இருக்கும்போது கும்பகோணத்தை ஸ்பெஷலாக ஸெலக்ட் பண்ணுவானேனென்று யோசித்துப் பார்த்தேன. அப்போது கும்பகோண மஹாத்ரத்தின் மாஹாத்மியங்கள் ஒன்றுக்குமேல் ஒன்றாக அலைமோதிக் கொண்டு நினைவு வந்தன4. முக்யமாக, இப்படி யோசித்துக் கொண்டே போகும்போது, ‘அட! நம்முடைய ஆசார்யாளின் அவதாரத்திலேயே கும்பகோண ஸம்பந்தம் இருக்கிறது போலிருக்கிறதே!
ஆதிநாளில் அவருடைய பூர்விகர்களுக்கே கும்பகோண ஸம்பந்தமுண்டு என்று தோன்றுகிறதே!’ என்று ஆச்சர்யப்படும்படியாகச் சில link -கள் (இணைப்புத் துண்டுகள்) அகப்பட்டன. அதைத்தான் சொல்ல வந்தேன்.திருச்சூர் என்பதை நம்பூதிரிகள் ‘சிவபுரம்’ என்று சொல்கிறார்கள். தமிழில் சொன்னால் — தமிழ்தானே மலையாளத்திலும் ஆதிபாஷை? அதனால் அப்படிச் சொன்னால் — ‘சிவப்பேரூர்’. புண்யக்ஷேத்ரங்களுக்கு ஆரம்பத்தில் ‘திரு’ சேரும். மெட்றாஸிலேயே அல்லிக்கேணி என்பதைத் திருவல்லிக்கேணி என்றும், ஒற்றியூரைத் திருவொற்றியூர் என்றும் சொல்கிறோமல்லவா? அப்படி சிவப்பேரூருக்குத் என்றும் ‘திரு’ போட்டு சொன்னால் ‘திருச்சிவப்பேரூர்’. ‘திருச்சிவப்பேரூர்’ என்பது மருவித்தான் ‘திருச்சூர்’ என்றாகியிருக்கிறது!திருச்சூருக்கு சிவபுரம் என்று பேர் சொன்னேனல்லவா?
சிவபுரம் என்று தமிழ் நாட்டிலும் ஊர் இருக்கிறது. பாடல் பெற்ற ஸ்தலம். அப்பர், ஸம்பந்தர் இருவருடைய தேவாரங்களும் அவ்வூர் ஸ்வாமிக்கு இருக்கிறது. அது கும்பபோகணத்துக்கு மூன்று மைலில் தென்கிழக்கே இருப்பது.கும்பகோணம் விஷயமாகச் சொன்னதற்கு இங்கேதான் காரணம் வருகிறது.ஒரு மஹாக்ஷேத்ரமிருந்தால் அதன் ஸாந்நித்யம் அதைச் சுற்றி ஐந்து க்ரோச ‘ரேடிய’ஸுக்குப் பரவியிருக்கும். ஒரு க்ரோசம் என்பது ஸுமார் இரண்டு, இரண்டே கால் மைல். அதாவது ஒரு மஹாக்ஷேத்ரத்தின் தெய்விக சக்தி, அதைச் சுற்றிப் பத்துப் பன்னிரண்டு மைல் தூரத்துக்குட்பட்ட வட்டம் முழுவதும் பரவியிருக்கும். பஞ்ச க்ரோச எல்லை என்று அதைச் சொல்வார்கள். சிவபுரம் அப்படிக் கும்பகோணத்தின் பஞ்ச க்ரோச எல்லைக்குள் இருப்பது.பெரிய நகரங்களை அவற்றை யொட்டியிருக்கும் சின்ன ஊர்களோடு சேர்த்து இன்னம் பெரிய நகரமாக Greater Bombay, Greater Madras என்றெல்லாம் சொல்கிற வழக்கமிருக்கிறதெல்லவா? பஞ்ச க்ரோச எல்லையை அப்படி வைத்துக்கொண்டால் சிவபுரம் Greater kumbhakona -த்துக்குள் வந்துவிடும்!தமிழ்தேசத்தில் கும்பகோணப் பஞ்சக்ரோச எல்லைக்குள் ஒரு சிவபுரம் இருக்கிறது. மலையாளத்தில் காலடிக்கு அருகே ஒரு சிவபுரம் (திருச்சூர்) இருக்கிறது. தமிழ்தேசத்திலிருந்து மலையாளத்துக்குப் போய்க் குடியேறியவர்கள் தங்களுடைய பூர்விக ஊர்களின் பெயர்களையே அங்கே வைத்தார்கள் என்பதற்கும் நிறையச் சான்று இருக்கிறது. இப்படிப் பார்க்கும்போது, ‘இரண்டும் இரண்டும் நாலு’ என்கிற மாதிரி என்ன ஊஹிக்கமுடிகிறது?
கும்பகோணச் சிவபுரவாஸிகள் தான் ஆதியில் மலையாளத்துக்குப்போய் அங்கே தாங்கள் ‘ஸெட்டில்’ ஆன ஊருக்கும் அந்தப் பெயரையே ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் வைத்து, அந்த ஸம்ஸ்க்ருதப் பெயர் அதே ரூபத்திலேயும், தமிழ்ப் பெயர் ‘திருச்சூர்’ என்று மருவியும் இருக்கவேண்டுமென்று தோன்றுகிறதல்லவா?அந்தத் திருச்சூரில் போய் பஜனம் இருந்துதான் ஆசார்யாளின் தாய் தந்தையர் ஈச்வரனிடமிருந்து வரம் பெற்று, ஈச்வரனையே அவதார புத்ரராகப் பெற்றது!கும்பகோணத்துக்கு ஆசார்ய ஸம்பந்தம் இதோடு முடிந்துவிடவில்லை.
இன்னமும் ‘கிட்ட உறவு’ சொல்கிறேன்.ஆசார்யாளுடைய தகப்பனாரின் பெயர் சிவகுரு என்பது. ரொம்பவும் பொருத்தமான பெயர். ‘குரு’ என்றால் நேர் அர்த்தம் ‘பெரியவர்’ என்பது. அதனால் உபதேசம் செய்பவரை மட்டும் குரு என்று சொல்லாமல் தகப்பனாரையும் குரு என்று சொல்வதே வழக்கம். ஆகவே சிவ அவதாரத்துக்குத் தகப்பனாராக இருந்தவருக்கு சிவகுரு என்ற பெயர் ரொம்பவும் பொருத்தந்தானே?ஆசார்யாளுடைய அம்மாவின் பெயரும் இப்படியே தான்! ஆர்யாம்பா என்பது அந்த அம்மாளின் பெயர். எல்லாவற்றிலும் ச்ரேஷ்டராக இருந்ததால் நம் ஆசார்யாள் ‘ஆர்யர்’. அவருக்கு ‘அம்பா’ என்றால் ‘அம்மா’. அப்படியிருந்தவள் ஆர்யாம்பா.சிவகுரு ஸமாசாரத்துக்கு வருகிறேன். இந்தப் பெயர் நாம் ரொம்பக் கேள்விப்படுவதேயில்லை. தென்னாட்டில் இல்லாத அநேக பெயர்கள் வடநாட்டில் வைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் வடநாட்டிலும்கூடப் ‘சிவகுரு’ப் பேர்க்காரர்கள் இல்லை. இந்தியாவில் எங்குமே அந்தப் பெயர் வைக்கப்படுவதாகக் காணோம். ரொம்பப் பேர், ‘சிவனாகிய ஆதிகுரு, அல்லது சிவனுக்கும் உபதேசம் செய்த குமார ஸ்வாமி — இவர்கள்தான் சிவகுரு. மநுஷ்யர்களில் சிவகுரு என்றால் அது ஆசார்யாளின் அப்பா ஒருத்தர்தான்’ என்று கூட நினைத்துக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு அபூர்வமாகத்தான் ‘சிவகுரு’ என்று பேர் இருக்கிறது.ஆனாலும் தமிழ் நாட்டில் ஒரு ஊரைச் சுற்றி மட்டும் இந்தப் பெயர் சற்று அதிகம் அடிபடுகிறது. சிவகுருநாதன் செட்டியார், சிவகுரு உடையார், சிவகுரு பிள்ளைவாள் — என்றெல்லாம் அங்கே காதில் படுகிறது. அது எந்த ஊர் என்றால் — அதே கும்பகோணம் தான்! கும்பகோண வட்டாரத்தில் மாத்ரமே சிவகுருப் பேர் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஏன் அப்படி?
ஏனப்படியென்றால் கும்பகோணத்துக்குக் கிட்டே பஞ்ச க்ரோச எல்லைக்குள் உள்ள அந்த சிவபுரத்தில் கோவில் கொண்டுள்ள ஈச்வரனுக்கு சிவகுருநாத ஸ்வாமி என்பதே பெயர்! முருகன் சிவனுக்கு குருவாகி உபதேசித்த ஸ்வாமி மலையும் கும்பகோணத்துப் பஞ்ச க்ரோசத்துக்குள்ளேதான் வந்துவிடுகிறது! அங்கே பிள்ளைக்கு அந்த ‘டைட்டிலை’க் கொடுத்துவிட்டோமே என்று இங்கே அப்பாவே ‘சிவகுரு’ப் பேர் வைத்துக்கொண்டிருக்கிறார்! இவர் சிவனாகிய குரு; ஸ்வாமிநாத ஸ்வாமி சிவனுக்கு குருவாகிய அவருடைய பிள்ளை; மலையாள ப்ராம்மணரான சிவகுருவோ சிவ அவதாரத்தைப் பிள்ளையாகக் கொண்ட அப்பா – சிவகுரு! ஒரே பெயரில் மூன்று தினுஸு!மலையாள ப்ராம்மணருக்குக் கும்பகோணச் சிவபுரத்து ஸ்வாமியின் பேர் இருக்கிறது; அவர் பிள்ளை வரம்வேண்டித் தவமிருந்தது மலையாளச் சிவபுரமான திருச்சூர் — என்பதிலிருந்து என்ன நிச்சயப்படுகிறது?
ஆதியில் கும்பகோணச் சிவபுரத்திலிருந்து பரசுராமர் அழைத்துக்கொண்டு போன சோழிய ப்ராம்மணர்கள் மலையாளத்தில் குடியேறின ஊர்தான் திருச்சூர் என்றும் அப்படிப்போன குடும்பம் ஒன்றின் வம்சத்தில் வந்தவர் தான் சிவகுரு என்றும் தீர்மானிக்கத் தோன்றுகிறதல்லவா?திருச்சூரைச் சுற்றி அந்த வம்சாவளி பரவியபோது சிவகுருவின் தகப்பனாரான வித்யாதிராஜரோ அவருக்கும் முந்தி ஒருவரோ காலடியில் ‘ஸெட்டி’லாகி இருக்க வேண்டும். ஆனாலும் தங்கள் ஆதி ஊரான சிவபுரம், பிறகு மலையைாளத்தில் ஸொந்த ஊராக ஆன திருச்சூர் ஆகிய இரண்டையும் அக்குடியினர் மறக்காமலே இருந்திருக்க வேண்டும். அதனால்தான் வித்யாதிராஜர் புத்ரனுக்கு சிவபுரத்து ஸ்வாமியின் பெயரான சிவகுரு என்பதை வைத்திருக்கிறார். அப்புறம் அந்த சிவகுரு புத்ரனுக்காகத் தபஸ்–பஜனம்– இருக்கவேண்டுமென்று நினைத்தபோது திருச்சூருக்கே போயிருக்கிறார்.
ஆக ஆசார்யாளின் ஆதி பூர்விக மூதாதைகளே கும்பகோணம் வட்டாரத்துக்காரர்கள்தான் என்று ஊஹிக்க முடிகிறது.இதைவிட அந்த ஊருக்கு (கும்பகோணத்திற்கு) என்ன பெருமை இருக்க முடியும்? அங்கே ஸ்ருஷ்டிக்கான அம்ருத கும்பம் வந்து தங்கினதைவிட, ஸ்ருஷ்டியிலிருந்து விடுபட்டு அமரமான மோக்ஷத்தை அடைவிக்கும் அத்வைத அம்ருத கும்பத்தை லோகமுள்ளளவும் ஜீவர்களுக்கு வற்றாமல் சுரக்கும்படியாக ஸ்தாபித்து வைத்துவிட்ட ஆசார்யாள் அந்த க்ஷேத்ரவாஸிகளின் வம்சத்தைத்தான் தேர்ந்தெடுத்து அவதாரம் பண்ணினாரென்பதுதான் அதன் மஹா பெருமை.காஞ்சீபுரத்தில் இருந்த ஆசார்யாளின் ஸ்ரீமடத்துக்கு இன்னொரு ‘ஸெகண்ட் காபிடல்’ அமைக்க நேர்ந்தபோது கும்பகோணமே அந்த ப்ரைஸைத் தட்டிக்கொண்டு போனதற்கு இதுவும் ஒரு முக்யமான காரணம் என்று தோன்றிற்று.
ஆசார்யாளோடு அலாதியான ஆதி ஸம்பந்தம் அந்த ஊருக்கு இருப்பதான காரணம் — ராமருக்கு ஸுர்ய வம்சம் என்பதுபோல ஆசார்யாளுக்குச் சொல்வதானால் அந்த வம்சப் பூர்விகர்களுக்கு எது ஜன்மக்ஷேத்ரமோ அது கும்பகோண வட்டம் என்பது.ஆசார்யாளுடைய ஜீவித முடிவுடன் முடிபோட்டுக் கொண்ட ஊர் காஞ்சி; அவருடைய ஜீவித ஆரம்பத்துடன் முடிபோட்டுக் கொண்ட ஊர் கும்பகோணம்! எப்படியென்றால், ஆசார்யாள் ஸித்தியடைந்த க்ஷேத்ரம் காஞ்சி.
அவர் அவதார ஜன்மா எடுப்பதற்காக எந்த ஊரில் தபஸிருந்து வரம் பெறப்பட்டதோ அந்த ஊரின் மூலமான ஊரை அங்கமாகக்கொண்டது கும்பகோணம். அவரைப் பிறப்பிக்க நிமித்த மாத்ரமாக இருந்தவர் யாரோ அவருடைய பெயரைக் கொடுத்ததும் கும்பகோணம் வட்டாரம்தான். ஆசார்யாளின் ஆதி மூதாதைகளின் ஜன்ம ஸ்தலமாக இருந்திருக்க கூடியது அந்த வட்டம்தான்.
1 62-வது பீடாதிபதிகளான ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் (IV).
2 ஸ்ரீசரணர்கள் அச்சந்நிதியில் 1944-ல் அம்பிகையின் பாதுகா பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
3 கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை கோதாவரி, காவேரி என்று ஏழு ஆறுகள்.
4 கும்பகோணத்தின் சிறப்புக்கள் குறித்த ஸ்ரீசரணர்களின் விரிவான உரை நம் நூற் பகுதிகளிலொன்றில் வெளியாகலாம்.
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி
ஐந்தாம் பகுதி
ஆறாம் பகுதி
ஏழாம் பகுதி